நகை அலங்காரத்தையே மிஞ்சிடுவார்கள் நம் ஊர் பெண்கள் சிகை அலங்காரத்தில்.. ஏன் சொல்லப்போனால் சிகை இருந்தாலே தனி அழகுதான்.. அதிலும் கருமையான நீண்ட இடுப்பளவு கூந்தல் ஒருவ௧ை அழகு என்றால் இயற்கையே பின்னிவிட்டது போல் சுருள் சுருளாய் தோள்பட்டையில் படர்வதும் ஒரு தனி அழகுதான்..
ஆண்கள் மட்டும் இதில் சலித்து போனவர்களா என்ன…நீளம் இல்லாவிட்டாலும் அடர்த்தி இல்லாவிட்டாலும் என்னேரமும் பாக்கெட்டில் சீப்பு வைத்துகொண்டு கிடைக்கிற வேளை எங்கிலும் டிசைன் டிசைனா தலை வாரி கொள்வார்கள்… ஆனால் இப்போதோ பெரும்பாலான இடங்களில் நம் கண் முன் தோன்றும் ஹார்ட் ஸ்டைல் வலுக்கை,இளநரை..பெண்களிடமோ ஷாட் கட், ஃப்ரீ ஹேர்… அடிப்படை காரணம் பார்த்தால் முடி ரொம்ப கொட்டுது,இள வயதிலே நரை, அடர்த்தி இல்லை என்பதுதான்.. சிகையை நம் விருப்பத்திற்கேற்ப அமைத்து கொள்ளவேண்டும். அதன் தன்மையை கண்டு நாம் மாற கூடாது…
உங்கள் உடல் குளிர்வானதோ இல்லை வெப்பம் கொண்டதோ, உங்கள் பனி வெயிலில் அலைந்து திரிவதோ இல்லை ஏ. சி ரூமில் நாற்காலியில் அமர்ந்து பார்பதோ… எதுவாயினும் உங்கள் கூந்தல் அழகு உங்கள் பொருப்பு..கீழ்க்கண்ட முறைகளில் ஏதோ ஒன்று உங்களின் கூந்தல் பராமரிக்க உதவும்..
முடி உதிர்வை தடுக்க:
முடி உதிர்வை தடுத்து நன்றாக வளர ரொம்ப எளிமையான முறை வீட்டில் உள்ள வெங்காயத்தை பயன்படுத்துவது. முடி வளர்ச்சிக்கு வெங்காய சாறு மிகவும் பயன்தரும். வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கி அதனை நன்றாக அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்.. அதை தலையில் தேய்த்து நன்றாக மசாஜ் செய்து 15 நிமிடங்களுக்கு ஊற விடுங்கள்.. பின்னர் நீங்கள் எப்போதும் பயன்படுத்தும் ஷாம்பு அல்லது சிகைக்காய் தேய்த்து குளிக்க வேண்டும். வாரம் ஒரு முறை அல்லது இரண்டு வாரத்துக்கு ஒரு முறை பயன்படுத்தலாம். குளிர்ந்த உடலுக்கு இது உகந்தது அல்ல..
ஆரோக்கியமான கூந்தலுக்கு:
தேங்காய் பால் உடல் ஆரோக்யத்துக்கு எவ்வளவு வலிமையோ அதே போல் கூந்தலுக்கும் மிகவும் ஆரோக்யமானது.. தேங்காய் அரைத்து சுத்தமான பால் எடுத்து கொள்ளவும். அதை முடி வேர்களில் படும்படி நன்றாக தேய்த்து மசாஜ் செய்து 1 மணி நேரம் கழித்து தலைக்கு குளிக்கவும். இதில் உள்ள இரும்பு, பொட்டாசியம் மற்றும் அத்தியாவசிய சில கொழுப்பு சத்துக்கள் இயற்கையாக முடி வளர உதவும்.
மிருதுவான கூந்தலுக்கு:
பழங்காலம் தொட்டு பயன்படுத்தி வரும் முறை என்று இதை சொல்லலாம் முட்டையின் வெள்ளை கரு.. வெள்ளை கருவை மட்டும் தனியாக பிரித்து எடுத்து அதோடு சிறிது ஆலிவ் ஆயில் கலந்து முடியின் வேர்ப்பகுதியில் இருந்து நுனி வரை தேய்த்து கொள்ளவும். பிறகு குளிர்ந்த தண்ணீரில் தலைக்கு குளிக்கவும்.. இதனால் முட்டையில் உள்ள புரத சத்து, கந்தகம், துத்தநாகம், இரும்பு, அயோடின் ஆகிய மொத்தமும் சேர்ந்து முடியையை மிருதுவாகவும் ஆரோக்யமாகவும் வேகமாக வளர உதவும்..
கருமையான கூந்தலுக்கு:
அடுத்த எளிமையான பொருள் வெந்தயம்.. . சிறிது வெந்தயத்தை ஊர வைத்து நன்றாக அரைத்து பேஸ்ட் போல் ஆக்கி கொள்ளவும். இந்த கலவையோடு சிறிது தேங்காய் எண்ணெய் கலந்து உச்சந்தலையில் தேய்த்து அரை மணி நேரத்திற்கு பின் குளிக்கலாம்.. கூந்தலை கருமையாகவும் நீளமாகவும் வளர உதவும்..
நரைமுடி தடுக்கும் முறை:
வைட்டமின்-சி நிறைந்துள்ள நெல்லிக்காய் நரைக்கான மருந்து. 2 டீஸ்பூன் நெல்லி தூள், 2 டீஸ்பூன் சிகைக்காய் மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு தயார் செய்து கொள்ளவும். அதனை உச்சந்தலையில் தடவி வேர் முழுவதும் நன்றாக தேய்த்து 45 நிமிடங்களுக்கு பிறகு குளிக்கலாம்.. இது முடியின் வேர்க் கால்களை வலுப்படுத்தி முடி உதிர்வதையும் குறைக்க உதவும். மேலும் நரைமுடியை தடுத்து பொடுகு தொல்லையிலிருந்தும் விடுபட உதவும்.
பொடுகு நீங்க:
கற்றாழை மற்றும் வெந்தயத்தை ஒன்றாக அரைத்து தலையில் தேய்த்துக் கொள்ளவும். 20 நிமிடங்களுக்கு பிறகு தலைக்கு குளித்து கொள்ளலாம். கற்றாழை யில் ஏராளமான நன்மைகள் உள்ளன. இதில் உள்ள வைட்டமின் மற்றும் தாதுக்கள் முடி வளர்ச்சிக்கு உதவும்.. உடலுக்கும் குளிர்ச்சி தரும். பொடுகுகளை யும் நீக்கும்…
கூடுதல் தகவல்:
ஐந்து நிமிட மசாஜ் கூட கூந்தலையும் தேகத்தையும் புத்துணர்ச்சியோடு வைக்க பேருதவி செய்யும். நாள்தோறும் சிறிதளவு தேங்காய் எண்ணெய் தேய்த்து வந்தால் முடி நன்கு வளர்வதை காணலாம்.. மேலும் உலர வைத்த மருதாணி இலை, வேப்பிலை, கருவேப்பிலை ஆகியவைகளை பொடி செய்து தேங்காய் எண்ணெயோடு கலந்து காய்சி வடிகட்டி தினந்தோறும் தேய்த்து வந்தால் அடர்த்தியான, கருகரு வென,பொடுகு தொல்லையில்லாமல், பேன் தொல்லையில்லாமல் முடி வளரும்…
உடல் சூட்டையும் தனித்து குளிர்ச்சி உண்டாக்கும்.. குளிர்ந்த உடலுக்கு தினம் அல்லாமல் வாரம் இரு முறை தேய்த்து வந்தாலே நல்ல பலன் தரும்… உங்கள் முடியை நீங்கள் பேணி காத்தால் உங்கள் தலைமுறைக்கும் பரிசளிக்கலாம் அழகான கூந்தலை…